8/2/15

கடைசிக்கோடு



என்னுடைய கடைசிக்கோடு புத்தகத்தை  திருப்பூர்  தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து 5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர்  தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23 ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.
  அவர்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல்  அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முடிவுகளை அறிவித்தபின்  விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள் செலவில் அழைத்து  நல்ல முறையில் வரவேற்று வசதியாக தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு  வந்தவர்களைப்போல  அன்புடன் உபசரிக்கிறார்கள்.
விருது பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில் மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள்.  என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.

திருப்பூர் தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர்  ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்

 தமிழ் படைப்பாளிகள் அனைவரும்   எழுதுபவர்களுக்கு இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..
 திருப்பூர் டாலர் நகரம் என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம் என்பதையும் புரிந்து கொண்டேன்,  



1/2/15

தினமலர் வார மலர்


இன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது

பார்த்தது,படித்தது, ரசித்தது.
அந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது!
பிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்!
ஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது!
151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!
புத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி ! பதியம் போட்ட 18 ஆண்டுகள்!
எழுதியவர் ரமணன்!
இவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்!
நடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது!
இப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்!
எழுதுவதற்காக படிப்பது ஒரு வகை!
படிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை!
ரமணன் இரண்டாவது வகை!
அதனால்தான் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது!
இது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல! அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது!
திடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!
அவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் !
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்!
பாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது!
நேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது!
இன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்!
ஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்!
மொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே!
காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்!
உண்மைதான்! அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்?
அதற்கு பதில் இங்கே உள்ளது!
சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்!
இதன் பின்னனி என்ன ? இங்கே பதிவு உண்டு!
அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்!
இது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு!
(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்!)