12/7/17

கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவோம்







சர்வ தேச சிலைகடத்தல் மன்னன் கபூர் கைது. பல கோடிகள் மதிப்புள்ள  பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தங்கள் நாட்டுக்குக் கடத்தப்பட்டு வந்த 1000 ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் நமது பிரதமரிடம் கொடுத்தார் போன்ற  தலைப்புச்செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம். 
அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய டார்க்கெட். தமிழக காவல் துறையில் இதற்காக உயர் அதிகாரியின் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 
ஆனால்  தன்னாலார்வர்கள் குழு ஒன்று மிகத்தீவிரமாக இந்த விஷயத்தில் பணியாற்றி அரசுக்கு உதவுகிறார்கள் என்பது பலர் அறியாத  விஷயம்.


திரு விஜய்குமார் சென்னையைசேர்ந்தவர்.  தற்போது சிங்கப்பூரில் காஸ்ட் அக்கடெண்ட் ஆகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். இவரது  இணைய தளம் இந்தியா பிரைட் பிராஜெக்ட்.(INDIA PRIDE PROJECT) 2013லிருந்து  இயங்கும் அந்தத் தளத்தில்  இந்தியாவில் காணாமல் போன கடவுள் உருவங்களின் படங்களை வெளியிட்டு விபரங்களைப் பதிவு செய்து வருகிறார். “நம் கடவுள்களை திருப்பிவீட்டிற்கு கொண்டுவருவோம்”  என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதன்படி   ஏதாவது பெரிய மியூசியங்களில் அல்லது ஆர்ட் டீலர் என்று அழைக்கப்படும் விற்பனையாளர்களின் கேட்லாக்களில் தெய்வச்சிலைகள்  இருந்தால் இவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை இவர்களின் குழு ஆராய்ந்து சம்பந்தபட்டவர்களைத்தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதைத்தவிர நேரடியாகவும் இவர்கள் களத்தில் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறார்கள். பல மியூசியங்களிலிருக்கும் சிலைகளை ஆராய்ந்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்:. இதற்காக இவர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரகசிய அதிரடி வேலைகளையும் செய்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஆவணங்களின் நகல்களைப்பெறுவது போன்ற பணிகள்.  இவருடைய குழுவில் சரித்தஆராய்ச்சியாளார். சிலையின் வயதைக்கணக்கிடுபவர். சந்தை விலை எவ்வளவு என மதிப்பிடுபவர்,   போன்ற எக்ஸ்பர்ட்களும்.  இருக்கின்றனர்.  அனைவரும் தன்னார்வலர்கள். 
 தமிழக போலிஸ் இதுவரை மீட்ட சிவபுரம் நடராஜர்  (11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 10ம் நூற்றாண்டு சிலை), தஞ்சை பிகதீஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன  ஐம்பொன் கணேசா, போன்றவற்றை  மீட்க இவர்கள் தந்த முக்கிய ரகசிய தகவல்கள், ஆவணங்கள் தான் உதவியிருக்கின்றன. இதுவரை 60 சிலைகளை மீட்க உதவியிருக்கிறார்கள். பிரமிக்கத்தக்க இந்தப் பணியைச் செய்யும் இவர்கள் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பவதில்லை. அவர்களின் இணைய தளத்தில் கூட இந்த அணியினரின் படங்கள் இல்லை. அமெரிக்கர்- தென்கிழக்கு ஆசியாவில் நமக்காக பணிசெய்பவர்.  இந்தியர்- தொன்கலை நிபுணர் அமெரிக்காவில் நம் பணி செய்பவர் என்ற ரீதியில்தான் தளத்தில்  நிழல் முகங்களுடன் விபரங்கள் இருக்கின்றன.பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தமிழகக் கோவில் சிலைகளை மட்டுமில்லாமல் மத்தியபிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பழுப்பு  சலுவைக்கல்லில் உருவான யஷ்ணியின் சிலையை மீட்கவும் உதவியிருக்கிறார்கள்.

 இவர்களது வெற்றிப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது  1000 ஆண்டு பழமையான நரசிம்ஹி என்ற காளியின் உருவம். இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மியூசியத்தில் இருந்தது. அதற்கு அவர்கள்  இட்டிருந்த பெயர் பெண் புலி.   இது பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் கோவிலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
 

எப்படி இவர்கள் இதைச்செய்கிறார்கள்.? ஒரு மியூசியத்தில் அல்லது விற்பனையாளர்களின் கேட்லாக்கில் இருக்கும் ஒரு சிலையை தங்களிடமுள்ள படங்களுடன் ஆராய்கிறார்கள். உருவம் ஒத்திருந்தால் மேலும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அந்தக் கோவிலில் இந்தச் சிலை திருடப்பட்டிருப்பது புகார் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்ற விபரங்களுடன் வல்லுநர் அறிக்கைகளுடன் சரித்திர சான்றுகளுடன் மியூசியம் அதிகாரிகளை அணுகி முதலில் அது திருடப்பட்டது என்பதை நிலை நிறுத்துகிறார்கள்.  பின்னர்  இந்திய அரசு, தமிழக அரசின் போலீசுக்கு விபரங்கள் தந்து விசாரணையைத்துவக்க வைக்கிறார்கள். வழக்கும் பதிவு செய்ய உதவுகிறார்கள். இதில் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

  2013ல் முதலில் எங்கள் குழு கண்டுபிடித்தது  ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் விருத்தாசலம் கோவிலின் அர்த்தநாரிஸ்வரர் சிலை. காணாமல் போய் 12 ஆண்டுகளாக அதற்காக எந்தப் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் அதைக் காணோம் என்று போலிஸில் செய்யபட்டிருக்கும் புகார். அதுவே இதற்கு இல்லை. 
 இதனால் தான் நாங்கள் கோவிலின் அரிய சிலைகள் பட்டியலிடப்பட்டு டிஜிட்டல் ஆவணமாக்கி ஆன் லையன்ல் தேடும் வசதியோடு இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறோம்.  நாங்கள் அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார்  விஜய் குமார்
இவர்களும் தமிழக போலீஸும் சந்திக்கும் மற்றொரு சவால்  தமிழகத்திலிருக்கும் 4500 கோவில்களில் இருக்கும் பல சிலைகளின், சிற்பங்களின் புகைப்படங்களோ விபரங்களோ கிடையாது. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும், ஒரு 1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையியும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அவை தமிழ் நாட்டிலிருந்துகடத்தப்பட்ட தொன்ம சிலை  என்று நம்புகிறார்கள். ஆனால் அவை எந்தக் கோவிலுடையது என்பது தெரியாதால் அதை மீட்கும் முயற்சியைத்  துவக்க  முடியவில்லை.
 எப்படி? ஏன்? இந்த ஆர்வம் இவருக்கு.  “கல்லில் கவிதை” என்ற இவரது  வலைப்பூவில் தமிழக கோவில்களின் அழகான சிற்பங்களைப் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர். அதற்கான தகவல்களை சேகரிக்கும்போது சிலைகளின் திருட்டு மற்றும் கடத்தல் பற்றி அறிந்திருக்கிறார். “ஆர்வம் அதிகரித்ததினாலும் , என் மாதிரி எண்ணங்கொண்ட நண்பர்களின் இணைந்ததாலும்  தான்   இந்த இணைய தளம்” என்கிறார்.  இந்தத் தளம் இயங்குவதற்கு முன்னால் சிலைதிருட்டு/கடத்தல் என்பது மிகப்பெரிய அளவில் அரசால் கண்காணிக்கப்படவில்லை. அவ்வப்போது சில சிலைகள் மீட்கப் பட்டாலும் அது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டதில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட்டதுமில்லை.  இதனால் தான் நியூயார்க் மெட்ரோபோலிஸ் மியூசியத்துக்கு  கடத்தல் மன்னன் கபூர் தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ஒரு சந்தரதுர்கா சிலையை அன்பளிப்பாக வழங்க முடிந்திருக்கிறது என்கிறார். சுபாஷ் கபூர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர்மீது  3 சிலைகளைக் கடத்திய வழக்கு இருக்கிறது.  ஆனால் அவரது நியூயார்க் கோடவுனில் இருப்பது 26000 சிலைகள் 
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நமது 10,000 சிலைகள் திருடப்படுகின்றன. இதுவரை நாம் 70000 சிலைகளை இழுந்திருப்போம். அதில்  முனைந்தால் நிச்சியமாக 10000 சிலைகளை மீட்க முடியும். ஏனென்றால் அதில் 4000க்கும்மேல் மியூசியங்களில் இருக்கிறது. இப்போது 60 சிலைகள் வரை  எங்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுவரமுடியும் . திருட்டு என ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டால் மியூசியங்கள் தந்துவிடுவார்கள்  அதனால் தான் எங்களுடன் ஒத்துழைக்க ஆர்வலர்களை அழைக்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்ய வேண்டும்.? 
மீயூசியங்களில் அல்லது எங்காவது நீங்கள் பார்க்கும் இடங்களில் சிலைபற்றிய சந்தேகம் வந்தால் அதன்படத்தை பேஸ்புக்கில் போடுங்கள். எங்கள் தளத்துக்கு அனுப்புங்கள். . உள்ளூர் அரிய சிலைகளின் படங்களையும் விபரங்களையும் போடுங்கள்.  மற்றவற்றை நாங்கள் செய்வோம் என்கிறார்.

எளிதாகத்தானே இருக்கிறது செய்வோமே?  

1 கருத்து :

உங்கள் கருத்துக்கள்